போராட்டத்தில் ஈடுபடுகின்ற வேலையில்லா பட்டதாரிகளுக்கு புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தல்!
போராட்டத்தில் ஈடுபடுகின்றபோது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்றபோது ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களால் பல பட்டதாரிகள் போராட்டத்தில் இருந்து ஒதுங்குகின்றனர்.
மிரட்டல்கள்
இருப்பினும் எமக்கான வேலைக்காக நாங்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். தொலைபேசி அழைப்புகள் ஊடாக மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றது.
நாங்கள் அரசுக்கு எதிராக போராடவில்லை, நாங்களும் இந்த அரசாங்கத்தை வரவேற்கிறோம்.அரசுக்கு எதிராக செயற்பட வேண்டாம், போராட்டம் செய்ய வேண்டாம் என ஒரு தரப்பினர் தடுக்கின்றனர் என்றார்.
பேச்சுவார்த்தை
இது குறித்து அமைச்சர் சந்திரசேகரனிடம் வினவியவேளை, புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது. புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்துவது அந்தக்காலத்தில் இருந்தது. அவர்களுக்கு போராடுவதற்கு உரிமை உள்ளது.
போராடுவதற்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுப்பதில்லை. அப்படி அச்சுறுத்தல் விடுப்பார்களாக இருந்தால் அது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
இதுவரை நாட்களும் இந்த பட்டதாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா. விளையாட்டாக செயல்படுபவர்களிடம் நீங்கள் இதுகுறித்து கதைக்காதீர்கள். நாங்கள் உங்களது பிரச்சினைகள் குறித்து நிச்சயமாக உள்வாங்கி செயற்படுவோம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |