மட்டக்களப்பில் இனங்காணப்படாத குருதிச்சோகை நோய் அதிகரிப்பு (Photos)
கோவிட் தொற்று காலத்திற்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்படாத குருதிச்சோகை நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகளவில் அடையாளம் காணப்பட்டுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி மருத்துவர் கீர்த்திகா மதனழகன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு ஆறுக்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்படாத குருதிச்சோகையினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் (11.03.2023) நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மட்டக்களப்பு - இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரோடு மட்டக்களப்பு மறைக்கோட்ட கத்தோலிக்க இளைஞர் சம்மேளனம் இணைந்து தவக்காலத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வரும் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய குரு முதல்வருமான அருட்தந்தை அலெக்ஸ் ரொபட் அடிகளார், மட்டக்களப்பு மறை மாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இயக்குநர் அருட்பணி டெரன்ஸ் ராகல் ஆகியோரின் தலைமையில் இந்த இரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து 10ஆவது ஆண்டாகவும் தவக்காலத்தினை முன்னிட்டு இந்த இரத்ததான முகாமை நடாத்தியுள்ளதாக இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்ததான முகாம்
இதன்போது மருத்துவர் கீர்த்திகா மதனழகன் கூறியதாவது, இந்தக்காலத்தில் இரத்தத்தின் அளவு ஓரளவு போதுமானதாகயிருக்கின்றன. ஆனால் கடந்த காலத்தில் கடுமையான இரத்தப் பற்றாக்குறையினை எமது வைத்தியசாலை எதிர்கொண்டிருந்த நிலையில் வேறு மாவட்டங்களில் உள்ள இரத்த வங்கிகளில் இரத்தம் வாங்கும் நிலையிருந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக எமது இரத்ததான முகாம்களை அதிகரித்து இரு மாதங்களுக்குத் தேவையான இரத்தங்களை ஓரளவு அதிகரித்துள்ளோம்.எமது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இரத்ததான முகாம்கள் மூலம் இங்கேயே இரத்தம் கிடைக்குமானால் அது பெரும் உதவியாக இருக்கும்.
தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதனால் இரத்தம் விநியோகிக்கும் அளவும் அதிகரித்துச்செல்கின்றது.
ஒரு நாளைக்கு 50 தொடக்கம் 60 வரையான அலகு குருதியை விநியோகிக்கவேண்டிய தேவையுள்ளது.அந்த குருதிகளை மக்களிடமிருந்து கிடைப்பதற்கான உதவிகள் தொடர்ச்சியாகக் கிடைக்குமானால் அது உதவியாக அமையும்.
குருதி வழங்குநர்
கோவிட் தொற்றுக்குப் பின்னரான நிலப்பகுதியில் குருதிச்சோகையுடன் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையான அதிகமாகவுள்ளது. ஒரு நாளைக்கு ஆறுக்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்படாத குருதிச்சோகையினால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்களின் இரத்த தேவையினையும் நிறைவேற்றவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான இரத்த முகாம்களை நடாத்தி குருதிகளை வழங்குவார்களானால் அது மிகவும் பிரயோசனமானதாக இந்த காலகட்டத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்றைய இரத்ததான முகாமில் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர்
ஒன்றிய உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டமை
குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
