நீர்கொழும்பு சிறைச்சாலையில் சக அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சித்த அதிகாரிக்குக் கொலை மிரட்டல்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது சக அதிகாரிகளை மீட்க போராடிய அதிகாரி ஓருவருக்கு பாதாள உலகக் குழுக்களினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையில் கைதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு, கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி வந்த தனது சக அதிகாரிகளைக் காப்பாற்றிய சிறைச்சாலை அதிகாரிக்குத் தொடர்ந்து கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரி
கைதிகள் சிறைச்சாலையின் பிரதான கதவை உடைத்துக்கொண்டு தப்பியோடுவதைத் தடுப்பதற்காக இந்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார் என்பது குறிபப்பிடத்தக்கது.

இந்தக் கொலை அச்சுறுத்தல்களில் பெரும்பாலானவை துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது உயிரையும் பொருட்படுத்தாது சக அதிகாரிகளைக் காப்பாற்றியதுடன், சிறைச்சாலைத் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக முன்வந்த இந்த வீரமிக்க அதிகாரிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று காலை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில், அங்கு கூடியிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் அமைச்சரைச் சூழ்ந்துகொண்டு, இந்த வீரமிக்க அதிகாரியைக் காப்பாற்றவும் அவருக்கு உடனடியாக உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்தனர்.
கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல்
சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட வேளையில், வன்முறையில் ஈடுபட்ட ஒரு குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகளைக் பிணைக் கைதிகளாகப் பிடித்து அவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர்.

கைதிகள் சிறைச்சாலையின் பிரதான கதவை மறித்து, பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட அதிகாரிகளைத் தாக்கிக் கொண்டிருந்த வேளையில், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த அதிகாரி துணிச்சலுடன் முன்வந்துள்ளார்.
அவர் சிறைச்சாலை வாயிலின் உட்புறத்தை நோக்கித் தனது ஆயுதத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, கதவை மறித்துக்கொண்டிருந்த கைதிகள் அதைக் கைவிட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அதன் பின்னர், கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த அதிகாரிகளையும், காயமடைந்திருந்த கைதிகளையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த அதிகாரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri