வெட்டப்படாத மரங்கள் - காஞ்சூரமோட்டை கிராம மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதில் தாமதம்
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சூரமோட்டை கிராமத்திற்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பற்காக பிரதேச சபையின் வீதிக்கரைகளில் உள்ள 12 மரங்களை அகற்றுவதற்கு 4 இலட்சம் ரூபாயை வனவளத்திணைக்களம் கோரியிருந்தது.
எனினும் மூன்று மாதங்கள் கடக்கின்ற நிலையிலும் குறித்த மரங்கள் இன்னும் அகற்றப்படாத நிலையில் உள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் தமது கிராமத்திற்கு அருகில் உள்ள மருதோடையில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள காஞ்சூரமோட்டைக்கு மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான மின்கம்பத்தைப் பதிப்பதற்கு 12 மரங்கள் தடையாக உள்ளன.
இதனை அகற்றுவதற்கான அனுமதியை வனவள திணைக்களம் வழங்காமல் நீண்டகாலமாக தடை ஏற்படுத்தி வந்த நிலையில் இது தொடர்பாகக் குறித்த மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்ததுடன் பல்வேறு அரசியல்வாதிகளிடமும் தமது பிரச்சினையை எடுத்துக்கூறியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் குறித்த மரங்களை அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்காக வனவளத்திணைக்களம் 4 இலட்சம் ரூபாயை மரங்களின் மீள் நடுகைக்காகக் கோருவதாகக் கடந்த வருடம் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் கலந்துரையாடப்பட்டிருந்தது. வன்னியில் சிங்கள குடியேற்றம் மற்றும் கிரவல் அகழ்வு செயற்பாடுகளிற்காக ஆயிரக்கணக்கிலான ஏக்கர் காடுகள் எந்த வித அனுமதியும் இன்றி அரசினாலும், தனிநபர்களாலும் அழிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழர்களின் பூர்விக கிராமமான காஞ்சூரமோட்டைக்கு மின்சார இணைப்பினை பெறுவதற்காக 12 மரங்களை அகற்றுவதற்கு வனவளத்திணைக்களம் நான்கு இலட்சத்தைக் கோரியமை தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் கடும் விசனம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த நிதியினை ஏதோ ஒருவகையில் செலுத்தியோ அல்லது மரக்கூட்டுத்தாபனம் ஊடாகவோ அந்த மரங்களை வெட்டுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் அன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த கூட்டம் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடக்கின்ற நிலையிலும் அந்த மரங்களை வெட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளும் உரிய திணைக்களங்களால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
இதனால் குறித்த கிராம மக்களிற்கான மின்சாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.








