வன்னியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபரின் பண்பாடற்ற செயற்பாடு
வன்னியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை வெளியிடுகின்றனர்.
திறன் வகுப்பறைகளைக் கொண்ட அந்த பாடசாலையின் திறன் வகுப்பறைக்கான இலத்திரனியல் உபகரணங்களில் ஏற்பட்டிருந்த பழுதினை சரிபார்க்க வந்திருந்த திருத்துநர்களுடன் அதிபர் நடந்துகொண்ட முறை தொடர்பிலேயே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
பொறுப்புணர்ச்சியற்று செயற்படும் அதிபரிடம் எப்படி ஒரு பாடசாலையின் பொறுப்புக்களை நம்பி ஒப்படைத்திருக்கின்றார்களோ என யாதார்த்தமாக பேசும் ஆர்வலர்கள் முல்லைத்தீவு கல்வி வலயத்தின் நிர்வாகத்திறன் தொடர்பிலும் அதிருப்தியினை வெளியிட்டனர்.
பாடசாலைகளை நிர்வகிக்கும் அதிபர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்பதை மறந்துவிட்ட அதிபராக அவர் செயற்பட்டிருக்கின்றார் என்பது வெளிப்படை.
திறன் வகுப்பறை
தரம் 5 வரையும் உள்ள ஆரம்பப் படாசலையான அந்த பாடசாலையின் இரண்டு திறன் வகுப்பறைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழைய மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தன்னார்வமாக உதவும் தமிழர்களின் பங்களிப்பினால் கிடைத்திருந்த நிதியுதவியில் உருவாக்கப்பட்டிருந்தது இந்த திறன் வகுப்பறை.
முன்பிருந்த அதிபரின் பராமரிப்பற்ற போக்கினால் இரண்டு திறன் வகுப்பறைக்குரிய மின் திரைகளும் ஏனைய இணைப்பு உபகரணங்களும் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்துள்ளது.
புதிதாக நியமனம் பெற்று வந்த புதிய அதிபர் அவற்றை மீளவும் திருத்தி பயன்படு நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார்.
திறன் வகுப்பறைக்கான உபகரணங்களை பழுது பார்ப்பதற்கும் ஒரு திறன் வகுப்பறைக்கான உபகரணங்களை இடம் மாற்றி மற்றொரு வகுப்பறைக்கு கொண்டு செல்வதற்கும் அந்த முயற்சிகளின் போது அதிபர் கருத்திலெடுத்திருந்தார் என அப்பகுதி பொது மகன் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.
அதிபரின் முயற்சியானது பெரும் சிரமங்களின் மத்தியிலும் அன்றைய ஒருநாள் பொழுதினை செலவழித்து அவர் தன் முயற்சியில் வெற்றியும் பெற்று விட்டனர்.
அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமையான போதும் பேருந்து வசதிகள் குறைந்த இடத்தில் அந்த பாடசாலை அமைந்திருந்ததால் போக்குவரத்து இலகுவாக இருக்கவில்லை.
வந்திருந்த திருத்துநர்கள் இருவரும் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது தான் அதிபரின் உயர் பண்பாட்டினை தாம் அறிந்து கொள்ள முடிந்தது என திறன் வகுப்பறையினை பழுதுபார்க்க வந்திருந்த திருத்துநர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்தவர்களின் அனுபவம்
யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மற்றும் மானிப்பாயில் இருந்து வந்திருந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவரின் வன்னி நோக்கிய பயணம் புதிய அனுபவங்களை தந்திருந்ததாக அவர்கள் இருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்திருந்தனர்.
வன்னியில் முல்லைத்தீவு நகரில் இருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் திறன் வகுப்பறைகளில் உள்ள மின் உபகரணங்களை பழுபார்த்து வருமாறு திறன் வகுப்பறைகளை விற்பனை செய்திருந்த நிறுவனம் இவர்களை வேண்டியிருந்தது. தொழில்முறையான வேண்டுகை இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர் அந்த நிறுவனத்தினை தொடர்பு கொண்டு நிலைமைகளை விபரித்திருக்கின்றார். தொழில் முறையாக அவற்றைப் பழுது பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பயண ஏற்பாடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேரூந்து மூலம் முல்லைத்தீவு நகரை அடைந்து திருத்துநர்கள் இருவரும் அங்கிருந்து மீண்டும் மற்றொரு பேரூந்து மூலம் குறித்த ஆரம்பப் பாடசாலையை அடைகின்றனர்.
அதிபர் கொடுத்த நம்பிக்கை
நிறுவனத்தின் வேலை ஒப்பந்த பிரிவு இயக்குநர்களில் ஒருவரினால் இவர்களின் பயணங்களை திட்டமிடும் போது போவது இவர்களது பொறுப்பு. திரும்பும் போது அதிபர் தன் காரில் அழைத்து வந்து முல்லைத்தீவு நகரில் யாழ்ப்பாண பேருந்தினை பிடிப்பதற்கேற்றவாறு உதவுவார் என கூறப்பட்டிருந்ததாக திருத்துநர்களுடன் உரையாடிய போது அவர்கள் விபரித்திருந்தனர்.
பாடசாலை அதிபரிடம் திருந்துநர்கள் மீண்டும் முல்லைத்தீவு நகரை அடைவதற்கான பயண ஏற்பாடுகள் தொடர்பில் வினவப்பட்டிருந்த போது, அவர் தன் காரில் அவர்கள் இருவரையும் அவர்களது உடைமைகளையும் முல்லைத்தீவு நகரிற்கு கொண்டு சென்று சேர்ப்பதாக சொல்லியிருக்கின்றார்.
அதனாலேயே தான் அந்நிறுவன வியாபார ஒப்பந்த பிரிவு இயக்குநர் திருத்துநர்களுக்கு நம்பிக்கையளித்திருந்தார் என்பதை அவருடைய உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேரம் மாலையாகிய போதும் வேலைகளை முடிக்க முடியாத சூழல் தோன்றவே தாம் புறப்பட வேண்டும்.
கடைசி யாழ்ப்பாண பேரூந்தை பிடிக்க வேண்டும் என்றால் இவர்கள் மாலை ஐந்து மணிக்கு முன்னர் ஆரம்பப்ப பாடசாலையை விட்டு வெளியேறிருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டு அதிபரோடு கதைத்த போது தான் கொண்டுபோய் விடுவதாகவும் மீதமுள்ள வேலைகளையும் முடித்துக் கொடுக்கும் படி அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாலை ஆறு மணிவரை வேலைகளைச் செய்து முடித்துக் கொடுத்திருந்தனர் எனவும் அறிந்து கொள்ள முடிந்தது.
அதிபரின் பண்பாடற்ற அணுகல்
முல்லைத்தீவு நோக்கிய பயணத்தில் இருவரையும் அழைத்துச் செல்வதோடு அவர்கள் தங்களுடன் எடுத்து வந்த உபகரணங்களையும் முல்லைத்தீவு நகருக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அதிபர் முகப்பு விளக்கு இல்லாத, திறன் குறைந்த மோட்டார் சைக்கிளை மட்டுமே வைத்திருக்கின்றார். அதில் தான் அவர் தன் வீட்டில் இருந்து வந்திருந்தார்.
ஆரம்பப் பாடசாலையில் இருந்து அதிபரின் வீடு இருபது கிலோமீற்றர் தூரம் வரையிருக்கும் என்பதும் முல்லைத்தீவு நகரில் இருந்து பாடசாலைக்கு செல்லும் வழித்தடத்திலேயே அதிபரின் வீடும் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய காரினை வேறு ஒருவர் கொண்டு போய்விட்டார். அதனால் இன்று காரினைக் கொண்டு வர முடியவில்லை என அதிபரினால் இவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
வீதியால் பயணிப்போரை மறித்து உதவி கேட்பதன் மூலம் முல்லைத்தீவு நகர் வரை பயணிப்பதற்கான முயற்சிகளில் அதிபரும் மற்றைய இருவரும் ஈடுபட்டிருந்தனர்.
பல வாகனங்கள் மாறி முப்பது கிலோமீற்றர் தூரத்தினை கடந்து முல்லைத்தீவு நகரினை அடைவதற்கு அவர்களுக்கு மூன்று மணித்தியாலங்கள் தேவைப்பட்டிருந்தது.
அதிபர் வீதியால் பயணித்தவர்களோடு பயணத்தை தொடர விட்டு தன் பாட்டுக்கு போய் வீட்டார்.யாழ்ப்பாணந்தில் இருந்து வந்தவர்களுக்கும் முல்லைத்தீவு நகரம் வரை பழக்கப்பட்ட இடமான போதும் ஆரம்பப் பாடசாலை வரையான தூரத்திலுள்ள இடங்கள் பழக்கமற்றவையாக முதல் பயண அனுபவத்தினை அவை கொடுத்திருந்த விடயத்தை அறிந்த போதும் அதிபரின் இந்த இயல்பு பொறுப்பற்றதாகவே உணரப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு நகரை அவர்கள் இருவரும் அடைந்த போது அங்கே யாழ்ப்பாணத்துக்கான பேருந்துகள் எவையும் இருந்திருக்கவில்லை.
மாற்றுவழியை பயன்படுத்தும் நோக்கம்
முல்லைத்தீவு நகரில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் புதுக்குடியிருப்பு கொழும்பு பேருந்தில் புறப்பட்டு புளியங்குளத்தினை அடைந்து அங்கிருந்து A9 வழியே பயணிக்கும் யாழ்ப்பாணம் நோக்கிய கொழும்பு - யாழ்ப்பாணம் பேரூந்தை எடுப்பதாக பயண பாதையினை திட்டமிட்டுக் கொடுத்துள்ளார்.
முல்லைத்தீவு நகர் வரை வந்து சேர்வதற்கு உதவிய மற்றொரு புதிய நண்பர் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இத்தனைக்கும் முல்லைத்தீவினைச் சேர்ந்த அந்த அதிபர் இவர்களுடைய பயண ஏற்பாடுகள் பற்றி அக்கறையற்று தான் வேலைகளை முடித்துக் கொண்டதோடு அவர்களாச்சு அவர்கள் பயணமாச்சு என்ற எண்ணத்தோறணையில் செயற்பட்டது போல இருந்ததாக அவர்களுக்கு உதவியவர் தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
பாடசாலையின் நலன் பற்றி அதிபர் காட்டும் அக்கறையில் பாதியையேனும் முன் அனுபவமில்லாத இவர்கள் இருவருக்கும் அவர்களது பயணத்தினை இலகுவாக்குவதில் காட்டியிருக்க வேண்டும்." இப்படியான மோசமான பாண்பாடற்ற அதிபர்களை நம்பி எப்படி ஒரு பாடசாலையை பொறுப்புக் கொடுக்கின்றார்களோ தெரியவில்லை என அவர் மேலும் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
திருத்துநர்கள் இருவரும் நள்ளிரவு கடந்த ஒரு நேரத்திலேயே யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது வீடுகளுக்குச் சென்று சேர்ந்துள்ளனர்.
அடுத்த நாளின் நண்பகல் பொழுதின் போது தமக்கு உதவிய புதிய அந்த நண்பர் அழைப்பெடுத்து தங்கள் பயணங்கள் தொடர்பில் விசாரித்து தாம் நல்லபடியாக போய்ச் சேர்ந்து விட்டோமா என்பது தொடர்பில் விசாரித்திருந்ததாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
பாடசாலையொன்றின் அதிபராக
இலங்கையின் கல்வி நிர்வாகவியலில் பாடசாலைகளின் தலைமை நிர்வாகியாக அந்த பாடசாலைகளின் அதிபர்களே செயற்பட்டு வருகின்றனர்.
அவர்களின் பிரதான கடமையாக இருப்பது பாடசாலையினை கல்விப் பணிமனையின் நெறியாளுக்கைக்கேற்ப பாடசாலையை நடத்திச் செல்வதாகும்.
மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒரு நேர்கோட்டில் இணைத்து கல்விக் கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து புதிய ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்பும் உயர்ந்த நோக்கத்தினை கொண்டியங்க வேண்டும்.
இந்த இலக்கினை அடைவதற்கு மாணவர்களின் பெற்றோர்களையும் பாடசாலையின் பழைய மாணவர்களையும் நலன் விரும்பிகளையும் ஒருங்கிணைத்து செயற்பாடுகளை இலகுவாக்கி கொடுக்க அதிபர் முயல வேண்டும்.
இத்தகைய இயல்புகளை அடிப்படையில் கொண்டிருக்காதவர்களை அதிபர்களாக பாடசாலைகளுக்கு நியமிப்பதன் மூலம் எதனை சாதிக்கப் போகின்றனரோ என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுவதனை தவிர்க்க முடியாது.
சில பொருத்தமற்ற விடயங்களை சுட்டிக்காட்டும் போது தமக்கு தெரியும். நீங்கள் சொல்லிச் செய்ய வேண்டி தேவை தங்களுக்கு இல்லை என எதிர்த்துரைக்கும் கல்வியதிகாரிகளை தாம் பல சந்தர்ப்பங்களில் எதிர்கொண்டதாக சமூக ஆர்வலர்களில் சிலர் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தமை நோக்கத்தக்கது.
இந்த செயற்பாட்டுக்கான நடவடிக்கைகள் என்பது இதுபோல் இனிவரும் காலங்களில் நடைபெறாதிருப்பதற்கான வழிமுறைகளாக பாடசாலைகளின் அதிபர்களை பொறுப்பு வாய்ந்த, மனித நேயமிக்க, சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து அதற்கேற்றாற் போல் நடந்து, மாணவர்களுக்கு சிறந்த தலைமைத்துவப் பண்பினை கற்றுக் கொடுக்கக்கூடிய செயற்பாடுடையவர்களாக புடம் போடுவது மட்டுமேயன்றி வோறொன்று சிறந்ததாக இருந்து விடப்போவதில்லை என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |