மன்னார் செளத்பார் பகுதியில் அனுமதியற்ற கடல் நீர் பரிசோதனை திட்டம் தடுத்து நிறுத்தம்
மன்னார் செளத்பார் கடல் பகுதியில் சட்ட விரோதமாக இடம் பெற்ற கட்டுமான பணி கடற்றொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாக நகரசபை தலைவரின் தலையீட்டுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் சவுத் பார் கடல் பகுதியில் கடற்றொழிலாளர்கள் கரைவலை தொழிலில் ஈடுபடும் பகுதியில் நேற்று (24.1.2026) மதியம் சட்டவிரோத கட்டுமான பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் பனங்கட்டு கொட்டு கடற்றொழில் சங்க தலைவர் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் இணைந்து குறித்த கட்டுமானப் பணி தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
பரிசோதனை நடவடிக்கை
இந்த நிலையில் இது ஒரு தனியார் காணி எனவும் அதில் கடல் நீர் பரிசோதனை நடவடிக்கை ஒன்றுக்காக கட்டுமான பணி இடம் பெறுவதாக குறித்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த கோரி கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த மன்னார் நகரசபை தவிசாளர் குறித்த கட்டுமான பணியை பார்வையிட்டதுடன் குழுவினரின் ஆவணங்களை பரிசீலித்தனர்.
கோரிக்கை
இந்தநிலையில் நகரசபையிடம் எந்த ஒரு அனுமதியும் பெறப்படாமல் கட்டுமான பணி இடம்பெற்றதை தொடர்ந்து கட்டுமான பணியை உடனடியாக நிறுத்தி சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து வெளியேற பணித்திருந்தார்.

அதே நேரம் உரிய ஆவணங்களுடன் இன்று (25.1.2026) நகரசபைக்கு வருகை தந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதுவரை எந்த ஒரு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்திருந்தார்.
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் கனிய மணல் அகழ்வு தொடர்பான ஒரு பிரச்சனை நிலவி வருவதால் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் மக்களை குழப்பும் விதமாக இவ்வாறான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.