ஐ.நா. மனித உரிமை பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்து
செம்மணி மனிதப்புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
செம்மணியில் தடயவியல் அகழ்வாய்வுகள்
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு அவுஸ்திரேலிய ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான தருணம் இது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இலங்கையில் யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் தடயவியல் அகழ்வாய்வுகளில் 500 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சில எலும்புக்கூடுகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது, அவை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுகளின்படி இலங்கையில் நாடளாவிய ரீதியில் சுமார் 20 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவற்றுள் குறைந்தபட்சம் ஒரு புதைகுழி தொடர்பில் கூட முழுமையான விசாரணைகள் நடத்தப்படவில்லை.
சர்வதேச மன்னிப்புச்சபை ஆதரவு
மேலும், 1998ஆம் ஆண்டு முதன்முறையாகச் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச ஆதரவுடனான சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து செம்மணி விவகாரம் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது.

அண்மையில் செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தடயவியல் நிபுணர்களின் பங்கேற்புடன் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா உறுதியளித்திருந்தது.
அந்த வாக்குறுதியை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கமைய, செம்மணி தளத்தைப் பாதுகாத்தல், மனித எச்சங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுயாதீன விசாரணைகளை உறுதிப்படுத்த இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுதல் போன்ற நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தினார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri