ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம்! அலி சப்ரி வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும்.
நிராகரிப்பதாக அறிவிப்பு
46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறுவதாக அமைந்துள்ளது. எனவே இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள 46/1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு, 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வாசிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தின் பதிலுரையின் போதே அலி சப்ரி இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக, சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, விரிவான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இலங்கை கொண்டுவரும்.
எமது மக்கள் எதிர்நோக்கும் சமூக - பொருளாதார இன்னல்கள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் உணர்திறனை கொண்டுள்ளது. சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த உடனடி பல்நோக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தைத் தொடர்வதில் இலங்கை உறுதியாக உள்ளது.
அத்துடன் களத்தில் உண்மையான முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டு இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எங்கள் சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும், புதிய ஆற்றலுடன் முன்னேறுவதற்கும் நாங்கள் தயங்குவதில்லை.
பொருளாதார மீட்சியே எங்களின் உடனடி அக்கறை என்றாலும், நமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு சமமான முன்னுரிமை உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.