ஆரம்பமானது ஐ.நா கூட்டத்தொடர்! மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
கூட்டத்தொடர் ஆரம்பத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான 47 நாடுகள், சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று தொடங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரல்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
முன்வைக்கப்படவுள்ள அறிக்கை
மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையினை முன்வைக்கவுள்ளார்.
கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையினையும் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.
இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை
2020ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட 46/1 பிரேரணை செயற்படுத்தப்படும் விதம், மனித உரிமை விடயங்கள் என்பன குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் இலங்கை தொடர்பான விவாதமும் இன்றைய தினம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசாங்கம் சார்பில் ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.