இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ சீனாவுடனோ கூட்டணி அமைக்காது: ஜனாதிபதி உறுதி
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தி நிற்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரில் நேற்று (18.09.2023) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து - பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும்.
பிரதான உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் தலையிடுவதற்கு, இந்து சமுத்திர மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் விரும்பவில்லை.
ஒத்துழைப்பை கட்டியெழுப்ப முயற்சி
இந்த நாடுகள் தமது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு உட்பட அவர்களின் முதன்மையான விடயங்களில் கவனம் செலுத்தி, தமது நாடுகளின் இறைமை மற்றும் சுதந்திரத்தைப் பேண முயற்சிக்கின்றோம்.
அதேபோன்று, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளும் தமது நாடுகளின் இறைமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளடக்கிய க்வொட் (Quad) நாடுகள் மற்றும், சீனாவின் இலக்குகளுடன் தொடர்பில்லாத இந்து சமுத்திரத்தின் மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் தமது சொந்த முன்னுரிமைகளைக் கொண்டிருப்பதாகவும், அவற்றை மதிக்கத் தயாராக இருக்கும் எந்தவொரு தரப்பினருடனும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப இலங்கையும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தில் தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை, அவர்களின் தனிப்பட்ட முன்னுரிமைகளின் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.