சர்வதேச அமைதிக்காக கைகோர்த்த ஐக்கிய நாடுகள்
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஐரோப்பிய பேரவையின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் நேற்று(19) பிரஸ்ஸல்ஸில் சந்தித்து மிக முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் உக்ரைனில் தொடரும் மோதல்கள் உலகளாவிய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மிக முக்கியமான இராஜதந்திர நகர்வு
இந்தப் போர்களினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் உலகப் பொருளாதார பாதிப்புகள் குறித்து இருவரும் கவலை தெரிவித்தனர். சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநா ஆகிய அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது.
குறிப்பாக, எரிசக்தி பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள இரு தரப்பும் இணைந்து செயல்பட உறுதி பூண்டனர்.
"பகுத்தறிவு மற்றும் பேச்சுவார்த்தை மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும்" என்று குறிப்பிட்ட தலைவர்கள், வளர்ந்து வரும் பதற்றத்தைக் குறைக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஐரோப்பிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு, உலக அரங்கில் மிக முக்கியமான இராஜதந்திர நகர்வாகக் கருதப்படுகிறது.