இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ள விடயம்
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அரசியல் படுகொலைகள் மற்றும் 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அடைந்த முன்னேற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தன்னிச்சையான கைது, நீண்டகால தடுப்புக்காவல்கள்
இருப்பினும், அடக்குமுறையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பயன்பாடு தொடர்ந்து நீடிப்பதாகவும், தன்னிச்சையான கைதுகளும் நீண்டகால தடுப்புக்காவல்களும் தொடர்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 2025இல் 602 சித்திரவதை சம்பவங்களும், 18 காவல் மரணங்களும் பதிவாகியுள்ளதுட ன், 2026 ஏப்ரல் வரை மேலும் 138 சித்திரவதைகளும், 3 மரணங்களும் நடந்துள்ளன.
மேலும் ஜூலை மாதம் நீரகொழும்பு சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அவசர சிறை சீர்திருத்தங்களின் அவசியத்தை அறிக்கை வலியுறுத்துகிறது.
கண்காணிப்புகளும் அச்சுறுத்தல்களும்
இதேவேளை சிவில் சமூகப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜெனீவா ஐ.நா கூட்டங்களில் பங்கேற்போர் மீதான இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்புகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.

அத்துடன் பேராசிரியர் சுப்பிரமணியன் ரவீந்திரநாத் படுகொலை வழக்கில் 'பிள்ளையான்' மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்றாலும், 17 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட முத்தூர் வழக்கு போன்ற முக்கிய குற்றங்கள் பல ஆண்டுகளாகத் தேக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீடித்து வரும் நிறைவேற்று அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தண்டனையின்மையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும், மனித உரிமை மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை உயர் பதவிகளிலிருந்து விலக்கி வைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.