இன்னும் 12 நாட்கள் மாத்திரமே! சர்வதேசத்தில் இலங்கை அரசாங்கத்து்க்கு காத்திருக்கும் நெருக்கடி!
ஐக்கிய நாடு்கள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகின்ற நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் விடயம் தொடர்ந்தும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
நேற்று கொழும்பின் அரசியலில் பல்வேறு தரப்புக்களும் அரசாங்கத்தின் இயலாமை குறித்து தமது விமர்சனங்களை வெளியிட்டன.
இந்தநிலையில் ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்களின் பங்கின் முக்கியத்துவத்தை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கரும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர் தனது ட்விட்டர் தளத்தின் ஊடாக கவலை வெளியிட்டுள்ளார்.
கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்ய ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு இன்றியமையாதது.
அண்மையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விமர்சனக் குரல்களை மௌனமாக்குவது பொது விவாதம், சுதந்திரம் மற்றும் அனைவரின் மனித உரிமைகளையும் குறைமதிப்புக்கு உட்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கையின் குடியியல் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தென்னிலங்கையின் சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது நேற்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்கர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.



