புதிய சட்ட வரைவு தொடர்பில் ஐ.நா நிபுணர்கள் அநுரவுக்கு கடிதம்
அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு’ சர்வதேச சட்டங்களுக்கு முழுமையாக இணங்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்த ஆலோசனைகளை இந்த மாதம் 28ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டம் மீளாய்வு நடவடிக்கை
கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள், சட்டத்தை மீளாய்வு செய்வதற்கும், பொதுமக்களின் கருத்தை அறிய முற்பட்டதற்கும் அரசின் அர்ப்பணிப்பை நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்த புதிய சட்ட வரைவின் 3ஆம் பிரிவில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் விரிவாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய தெளிவற்ற வரைவிலக்கணங்கள் மனித உரிமைப் பாதுகாவலர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மட்டுமீறிய அதிகாரங்கள் குறித்து கேள்வி
சட்ட வரைவின் சில சரத்துக்கள், சர்வதேச சமவாயச் சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு முரணாக அமைந்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுமீறிய அதிகாரங்கள் குறித்து அவர்கள் தமது தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் புதிய சட்ட வரைவு எவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுடன் ஒத்துப்போகின்றது என்பது குறித்தும், கருத்துப் பகிர்வு செயல்முறை எந்தளவுக்கு வெளிப்படையானது என்பது குறித்தும் தமக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதியிடம் ஐ.நா. நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் பென் சோல் உட்பட ஏழு விசேட நிபுணர்கள் இந்தக் கடிதத்தில் கூட்டாகக் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan