லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைக்கு ஐ.நா கண்டனம்
லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரி, இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தொடர்பாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடிய மற்றும் கருத்து தெரிவித்த மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ஒடுக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அல் ஜசீரா மற்றும் 'லிபர்ட்டி இன்வெஸ்டிகேட்ஸ்' இணைந்து நடத்திய கூட்டு புலனாய்வில், பிரித்தானியாவில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களை விட இந்த கல்லூரியில்தான் அதிகளவிலான மாணவர்கள் மீது இத்தகைய நடவடிக்கைகள் பாய்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்
கடந்த 2023 ஒக்டோபர் முதல் 2025 நவம்பர் வரையிலான காலகட்டத்தில், பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகக் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குறைந்தது 26 மாணவர்கள் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவின் 156 பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், யுனிவர்சிட்டி கொலேஜ் லண்டன் (UCL) 24 வழக்குகளுடனும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 18 வழக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மொத்தமாகப் பிரித்தானியா முழுவதும் 230க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, இஸ்ரேல் இராணுவத்தில் பணியாற்றிய விரிவுரையாளர் ஒருவரைப் பற்றி மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட 18 வயது மாணவி ஒருவருக்குக் கல்லூரி வளாகத்திற்குள் வரத் தடை விதிக்கப்பட்டதுடன், அவர் மீது அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவான 'பிரிவென்ட்' திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட அவதூறுகள் பற்றி பல்கலை மாணவர்கள் அவதானித்து வருகின்றனர்..! பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம்
பல்கலைக்கழகங்களின் ஒழுங்குமுறை விதிகள்
கிங்ஸ் கல்லூரி நிர்வாகம் இத்தகைய கடுமையான போக்கை எடுப்பதற்குக் காரணியாக, அதன் பாதுகாப்புத் துறை சார்ந்த நிதித் தொடர்புகளே இருப்பதாகக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

காசாவில் குண்டுவீசப் பயன்படும் போர்விமான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் பி.ஏ.இ சிஸ்டம்ஸ் போன்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இந்தக் கல்லூரி சுமார் 3.3 மில்லியன் பவுண்டுகள் ஆராய்ச்சி நிதியுதவியாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்காக பேசியுள்ள ஐ.நாவின் சிறப்பு அதிகாரி ஜினா ரொமேரோ, மாணவர்களின் உரிமைகளைப் பறிக்க பல்கலைக்கழகங்களின் ஒழுங்குமுறை விதிகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.