தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி ஐ.நா முன்றலில் கவனயீர்ப்பு (PHOTOS)
‘சீனாவின் உதவியோடு இலங்கையில் தொடரும் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துங்கள்’ என்ற கோஷத்துடன் கண்காட்சியும் கவனயீர்ப்பும் ஐ.நா முன்றலில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கண்காட்சியை சுவிஸ் தமிழர் செயற்பாட்டு அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து நடத்தியுள்ளது.
இதில் பல்வேறு நாட்டவர்கள் வருகை தந்து அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிழற்படங்களினையும்,விபரங்களையும் பார்வையிட்டு நுணுக்கமான பல விடயங்கள் குறித்து அங்கு நின்ற செயல்பாட்டாளர்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
இந்த கவன ஈர்ப்பு நிகழ்வில் இலங்கையில் தொடரும் தமிழினப் படுகொலை பற்றியும், இலங்கையில் சீனாவின் தலையீடு பற்றியும், சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டிய செய்திகளை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பதாதைகள் மூலம் வெளிப்படுத்தினர்.
அத்துடன் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து ஐ.நா மனித உரிமை கழக ஆணையாளர் அலுவலகம் உட்பட முக்கியமான நாடுகளை சந்தித்து கடந்த 46/1 தீர்மானத்தின் அமுலாக்கல் குறிப்பாக சாட்சியம் திரட்டும் பொறிமுறையின் நடைமுறைகள் பற்றியும் செப்டெம்பர் 2022ல் வரவுள்ள புதிய தீர்மானம் ஒன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடபட்டது.
மேலும்,விரிவடைந்து வரும் அரசியல் ராஜதந்திர செயல்பாடுகளில் இணைந்து செயல்பட விரும்பும் அனைவரையும் சுவிஸ் தமிழர் செயற்பாட்டு அமைப்பினர் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.