தேநீர் விருந்துபசாரத்தில் சிரித்து பேசும் அரசியல்வாதிகளின் இரட்டை வேடம்! முபாறக் முப்தி காட்டம்
வரவு - செலவுத் திட்டத்தின் போது ஜனாதிபதியினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதியுடன் சிரித்துப் பேசிவிட்டு, வெளியே வந்து வரவு - செலவுத் திட்டத்தை விமர்சிப்பது தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தைக் காட்டுகின்றது என உலமா கவுன்சிலின் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.
சமஷ்டி தீர்வு உட்பட பல விடயங்களில் இவர்கள் இவ்வாறே மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில வரவேற்கத்தக்க விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்தமையானது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி இவ்வாறு வரிகளை அதிகரித்தால், எதிர்காலத்தில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி உருவாகும். மேலும், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு பாமர மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்போதே அது சிறந்த வரவு – செலவுத் திட்டமாக அமையும்.ஜனாதிபதி ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருந்தபோதிலும், இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்குப் பாரிய நன்மைகள் எவையும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
அரிசி இறக்குமதி செய்யப்பட்டமையால் உள்நாட்டு நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. உர வகைகள் மற்றும் கிருமிநாசினிகளின் விலைகள் அதிகமாக உள்ள நிலையில், விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தூரநோக்குடன் இவ்விடயம் கையாளப்படவில்லை.
மாகாண சபைகளின் நிர்வாகம்
மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்த நான்கு வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமையை நாம் முழுமையாக வரவேற்கிறோம்.
மாகாண சபைகள் அவசியமற்றவை என்பதே எமது கொள்கையாகும். மாகாண சபைகளின் நிர்வாகத்தினால் வைத்தியசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, அவை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதனால் நிர்வாகச் செலவுகள் குறைவதுடன், சிறந்த கட்டுப்பாடும் ஏற்படும்.

வரவு - செலவுத் திட்டத்தின் போது ஜனாதிபதியினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதியுடன் சிரித்துப் பேசிவிட்டு, வெளியே வந்து வரவு - செலவுத் திட்டத்தை விமர்சிப்பது தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி தீர்வு உட்படப் பல விடயங்களில் இவர்கள் இவ்வாறே மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் இலங்கையில் அண்மைக்காலமாகச் சில தேரர்கள் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவையாகும். நாட்டின் பொதுச் சட்டத்திற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் தேரராக இருந்தாலும் சரி, மௌலவியாக இருந்தாலும் சரி அனைவரும் கட்டுப்பட வேண்டும். தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்குப் பின்னால் நிச்சயமாக இனவாத சக்திகள் செயற்படுகின்றன என்பதை மக்கள் நன்கு அறிவர்.
தற்போது நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாத சூழ்நிலையில், இனவாதத் தரப்புகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே, தற்போதைய ஆட்சி தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.