போரில் வெற்றியடையப் போகும் உக்ரைன்! ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் வெற்றி பெறப்போவது யுக்ரைனே என அதன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தேசிய தொலைகாட்சியில் தோன்றி உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எப்படியிருப்பினும், போர் முற்று முழுதாக நிறைவடைய ராஜதந்திர பேச்சு வார்த்தைகள் மூலமே முடிவிற்கு கொண்டு வர முடியும் என அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், செவரோதநெற்ஸ்கி பிராந்தியத்தில் தற்போது உக்கிரமான யுத்தம் நடைபெறுகின்றது.
மரியுபோல் துறைமுக நகரத்தில் யுத்தம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு செயல்பட்ட ரஷ்ய துருப்பினர் தற்போது செவரோதநெற்ஸ்கி பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட 11 பாரிய தாக்குதல்கள், உக்ரைனினால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி, 8 யுத்த தாங்கிகள் உட்பட ஏராளமான இராணுவ தளபாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தாம் ரஷ்யாவினால் தாக்கப்படும் பட்சத்தில் நேட்டோ படையணிக்கு சமமான நிலையில், தமது படையினர் செயல்பட வேண்டும் என உக்ரைனின் தென் மேற்கு எல்லையில் உள்ள மோல்டோவா நாட்டின் வெளிவிவகார செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
முன்னர் சோவியத் குடியரசின் நாடாக இருந்த மோல்டோவா நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடாக இல்லை.
ஆனால், ரஷ்ய ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான மனு மோல்டோவினால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.