ரஷ்யாவின் இராட்சத போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன்! இரகசிய தகவல்களை வழங்கிய அமெரிக்கா
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்கடலில் போர்க்கப்பலின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா பகிர்ந்து கொண்ட உளவுத்துறை இரகசியங்கள் உதவிகரமாக இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி கருங்கடலில் உள்ள ரஷ்யக் போர்க்கப்பலைக் குறிவைத்து தாக்கும் முடிவு உக்ரைனின் தனிப்பட்ட முடிவு எனவும், இருப்பினும் கப்பல்களின் இருப்பிடங்கள் உட்பட பலவிதமான உளவுத்துறையை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாகவும் என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போரில், கருங்கடலில் இருந்து கடல் வழி தாக்குதலை தலைமையேற்று நடத்திய மோஸ்க்வா என்ற பிரமாண்ட போர்க்கப்பல் கடந்த மாதம் 13 ஆம் திகதி தீப்பிடித்து பின்னர் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து கப்பல் தீப்பற்றியதாக ரஷ்யா கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பலில் 510 மாலுமிகள் இருந்ததாகவும், மோஸ்க்வா கப்பல் தீயில் சிக்கி அதன் சிப்பந்தி ஒருவர் பலியாகி விட்டதாகவும், 27 பேர் காணாமல் போய் இருப்பதாகவும், 396 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.