விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்! - ரஷ்யாவிற்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை
உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என பிரித்தானியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரஸ்ஸல்ஸில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல் குறித்து விவாதிக்க நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் G7 தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் அவசர கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேட்டோ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து நடந்த செய்தி சந்திப்பில் பேசிய போரிஸ் ஜோன்சன் இவ்வாறு கூறியுள்ளார்.
“ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை. உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும். மேலும் 6,000 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
உக்ரைனுக்கு கூடுதலாக £25 மில்லியன் உதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். போலந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய இரு நாடுகளிலும் துருப்புக்களை இரட்டிப்பாக்குவதுடன், பல்கேரியாவிற்கு புதிய பிரித்தானியாவின் துருப்புக்கள் அனுப்பப்படும் என்றும் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார்.
உக்ரைன் தனியாக இல்லை நாங்கள் கிவ், மரியுபோல், லிவிவ் மற்றும் டொனெட்ஸ்க் மக்களுடன் இணைந்திருக்கின்றோம் எனவும் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் எனவும் போரிஸ் ஜோன்சன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.