ரஸ்யாவிற்கு எதிரான ஐரோப்பாவின் பாதுகாப்பு கவசமே உக்ரைன் – ஸெலன்ஸ்கீ
ரஸ்யாவிற்கு எதிரான ஐரோப்பாவின் பாதுகாப்பு கவசமாக உக்ரைன் தொழிற்பட்டு வருவதாகவும், தமது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் வலுவான ஆதரவு அவசியம் எனவும் உக்ரைன் ஜனாதிபதி வொலாய்மர் ஸெலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.
ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் போருக்கான ஆயத்தங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த எட்டு ஆண்டுகளாக ரஸ்ய இராணுவத்திற்கு எதிரான பாதுகாப்பு கவசமாக உக்ரைன் செயற்பட்டு வருகின்றது என ஜெர்மனில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் சந்திப்பு ஒன்றை நடாத்த விரும்புவதாக ஸெலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதி எதனை விரும்புகின்றார் என்பது தமக்கு புரியவில்லை எனவும் இதனால் அவரை சந்தித்து அதனை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகள் ரஸ்யாவை திருப்திபடுத்தும் கொள்கையிலிருந்து விடுபட வேண்டுமெனவும், தங்களிடம் பாதுகாப்போ ஆயுதங்களோ கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் தூண்டுதல்களுக்கு உக்ரைன் ஆத்திரமடையாது ஜனாதிபதி ஸெலன்ஸ்கீ தெரிவித்துள்ளார். ராஜதந்திர முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனையே உக்ரைன் விரும்புகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் – ரஸ்யாவிற்கு இடையில் போர் ஏற்படக்கூடிய அதிக சாத்தியங்கள் காணப்படுவதாக பல மேற்குலக நாடுகள் எதிர்வு கூறியுள்ளன.
இதன் காரணமாக சில நாடுகள் தங்களது நாட்டுப் பிரஜைகளை உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.