“யுக்ரெய்ன் போர்ச்சூழலில் திடீர் திருப்பம்” ரஸ்ய ஜனாதிபதியை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி இணக்கம்!(photos)
யுக்ரைன் மீதான நெருக்கடி குறித்து விவாதிப்பதறகாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா தனது அண்டை நாடு மீது படையெடுக்காவிட்டால் மட்டுமே பிரான்ஸ் முன்மொழிந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு இடம்பெறுமானால், பல தசாப்தங்களாக ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மோசமான பாதுகாப்பு நெருக்கடிகளில் ஒன்றிற்கு சாத்தியமான இராஜதந்திர தீர்வை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கும் புட்டினுக்கும் இடையில் இரண்டு தொலைபேசி கலந்துரையாடல்களுக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதியால் இந்த முன்மொழிவு அறிவிக்கப்பட்டது
இரண்டாவது தடவையாக கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதேவேளை எதிர்வரும் வியாழன் அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் என்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது சாத்தியமான உச்சிமாநாட்டின் விவரங்கள் விவாதிக்கப்படும் என்று மெக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ரஷ்யா, ஒரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக உளவுத்துறை கூறுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதனை மொஸ்கோ மறுத்துள்ளது.
அதேநேரம் கிழக்கு யுக்ரேனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் பிரிவினைவாதப் படையினர் உட்பட்ட சுமார் 190,000 துருப்புக்களை ரஷ்யா நிலைக்கொள்ளச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஸ்ய படையினர்(செய்மதிப்படம்)
------------------
