ரஷ்யாவிற்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: தீப்பற்றி எரியும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு
உக்ரைன் - ரஷ்யா போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கு ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கை குறிவைத்து உக்ரைன் படை இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் கிளின்ட்சி நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு தீப்பற்றி எரிந்துள்ளது.
ட்ரோன் தாக்குதலில் 6,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 4 இராட்சத டேங்குகளில் உள்ள எரிபொருள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழப்பு
கிளின்ட்சியில் பறந்து வந்த உக்ரைனின் ட்ரோனை, ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்க செய்து வீழ்த்தியதாகவும், அதற்குள் ட்ரோனில் இருந்து வெடிகுண்டு வெளியேறி எண்ணெய் சேமிப்பு கிடங்கில் விழுந்து வெடித்ததாகவும் பிரையன்ஸ்க் பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் ட்ரோன்கள் மாஸ்கோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்போவின் கன் பவுடர் ஆலையையும் தாக்கியதாக உக்ரைன் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள்
இந்த தாக்குதலில் ஆலைக்கு பாதிப்பு இல்லை என்றும், ஆலை வழக்கம்போல் செயற்படுவதாகவும் தம்போவ் ஆளுநர் கூறியுள்ளார்.
தற்போது ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், உக்ரைன் படைகள் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ட்ரோன்கள் மூலம், ரஷ்யாவிற்குள் உள்ள தொலைதூர இலக்குகளை குறிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |