ரஸ்ய படைகள் நகர்வதாக அமெரிக்கா அறிவிப்பு! யுக்ரெய்ன் ஆக்கிரமிப்பை தடுக்க, ரஸ்யாவிடம் உதவி கோரும், பிரிவினைவாதிகள்!
யுக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற நாட்டின் இரண்டு கிழக்கு பகுதிகள், யுக்ரேனியப் படைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க ரஸ்யாவிடம் உதவி கேட்டுள்ளதாக கிரெம்ளின் கூறியள்ளது.
எனினும் ரஸ்ய அரச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட இந்த கோரிக்கை விடயம், ரஸ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்கான ஒரு புனையப்பட்ட காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக பிபிசி கூறுகிறது.
இதேவேளை யுக்ரைன் நாட்டின் உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவில் இருந்து அவசரநிலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஒரு பெரிய அளவிலான படையெடுப்பிற்கு ரஸ்யா, இப்போது இராணுவ ரீதியாக முழுமையாக தயாராகிவிட்டதாக அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் மொஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளால் நிர்வாகத்தில் உள்ள இரண்டு பிராந்தியங்களுக்கு இதுவரை புதிய ரஸ்ய துருப்புக்கள் எதுவும் அனுப்பப்பட்டமை தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை.
ஏற்கனவே ரஸ்யாவில் வசிக்கும தமது குடிமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு யுக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
இது இவ்வாறிருக்க தற்காப்பு ஆயுதங்கள் மற்றும் உயிரிழக்காத உதவிகள் போன்ற வடிவங்களில் யுக்ரைனுக்கு அதிக இராணுவ ஆதரவை வழங்குவதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.
ஐரோப்பாவில் உள்ள ரஸ்ய தூதரகங்களுக்கு வெளியே யுக்ரேனிய ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடத்தப்பட்ட போராட்டம், பேஸ்புக்கில் உள்ள இளைஞர் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கிழக்கு யுக்ரைனின் டோன்பாஸ் பகுதிக்குள் மேலும் ரஸ்ய துருப்புக்கள் நுழைவதாக அமெரிக்கா நம்புகிறது என்று பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறியுள்ளார்.

ரஸ்ய படைகள் அந்தப் பகுதிக்குள் நகர்கின்றன என்று தாம் நிச்சயமாக நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.