ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி உக்ரைனுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியா
மேற்குலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், பிரித்தானியா தனது முதல் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் Ben Wallace தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா அனுப்பும் M270 multiple-launch ரொக்கெட் அமைப்பு ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ள உதவும் என்று பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எத்தனை ஆயுதங்கள் அனுப்பப்படும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்கா ரொக்கெட் அமைப்பை வழங்குவதாக அறிவித்ததை அடுத்து பிரித்தானியா இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் செயலால் ஆத்திரமடைந்த ரஷ்யா
அமெரிக்காவின் முடிவு ஏற்கனவே ரஷ்யாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில், பிரித்தானியா நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்குல நாடுகளின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனில் தாக்கும் இலக்குகளின் பட்டியலை விரிவுபடுத்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.
புதிய எச்சரிக்கை விடுத்த விளாடிமிர் புடின்
உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்றைய தினம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களாக நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இருப்பினும், கடந்த சில தினங்களாக உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சில மேற்கத்திய நாடுகள் கொடுத்து உதவுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் புதிய எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த எச்சரிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியிருப்பதாவது, “உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், நாங்கள் அதற்கான சரியான முடிவை எடுக்க நேரிடும். எங்களது ஆயுதங்களை அவர்களின் மீது உபயோகிக்க வேண்டி வரும்” என எச்சரித்துள்ளார்.