இலங்கையின் முன்னாள் தளபதிகளுக்கு எதிரான தடை: சர்வதேச நடவடிக்கைகளை கோரும் கண்காணிப்பகம்
இலங்கை பொறுப்புக்கூறலை அடைய எந்த முயற்சியும் எடுக்காத வரை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக நீதி பெறுவதற்கான சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்ய மற்றும் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட தடைகளை இங்கிலாந்து விதித்துள்ளது.
தடைக்கு பதிலளித்த இலங்கை அரசாங்கம்
இதனையடுத்தே தமது கருத்தை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஏனைய வெளிநாட்டு அரசாங்கங்களும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை தொடர்ந்து விதிக்க வேண்டும் என்றும், இலங்கையின் போர்க்குற்ற சந்தேக நபர்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள், ஆதாரங்களை பயன்படுத்தவேண்டும் என்று கோரியுள்ளது.
இந்தநிலையில் தடைகளை விதிப்பதன் மூலம் ஐக்கிய இராச்சியம் அரசாங்கம், இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளது.
இதேவேளை ஐக்கிய இராச்சியத்தின் தடைக்கு பதிலளித்த இலங்கை அரசாங்கம்,, இது இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த ஒருதலைப்பட்ச நடவடிக்கை என்றும், நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயல்முறைக்கு உதவாது, மாறாக சிக்கலாக்கவே உதவும் என்றும் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
