பிரித்தானியாவை அச்சுறுத்தும் கோவிட் வைரஸ்! - நான்கு மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு அதிகரிப்பு
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,135 புதிய கோவிட் -19 வழக்குகளும், 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 6ம் திகதி பின்னர் பிரித்தானியாவில் பதிவான அதிகூடிய நாளாந்த கோவிட் பதிவு இதுவாகும். இதன்படி, கடந்த பெப்ரவரி 6ம் திகதி 18,262 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
பிரித்தானியாவில் நேற்றைய தினம் 11,625 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், இன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரத்தினால் அதிகரித்துள்ளது.
இதனிடையே நேற்றைய தினம் கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை 299,837 பேர் பெற்றுக்கொண்டதாகவும், 250,875 பேருக்கு இரண்டாவது அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,448,680 ஆகவும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,740,115 ஆகவும் உயர்ந்துள்ளது.
அந்த வகையில், அங்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75,188,795 ஆகும்.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 60 வீதத்திற்கும் அதிகமான பெரியவர்களுக்கு இரண்டு அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளன, மேலும் 82.5 வீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு முதல் அளவு வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசியால் 14,000க்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும் தடுப்பூசி திட்டங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.