பிரித்தானியாவின் புதிய வரிச்சலுகை - இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு புத்துயிர்
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் கொழும்புக்கு வடக்கே அமைந்துள்ள ஆடைத் தளவாடங்கள் மற்றும் தர உறுதிப்படுத்தல் நிலையங்களுக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.
2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பிரித்தானியாவின் வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) சீர்திருத்தங்களுக்கு அமைவாக, ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகும் பொருட்களை அவர்கள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள்
புதிய சீர்திருத்தங்களின்படி, இலங்கை உற்பத்தியாளர்கள் உலகெங்கிலும் இருந்து துணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை பிரித்தானிய சந்தைக்கு வரி இல்லாத ஏற்றுமதி உரிமையையும் (Duty-free access) தொடர்ந்து அனுபவிக்க முடியும். இந்த வரிச்சலுகை மூலம் உற்பத்தி அளவு அதிகரித்து, போட்டித்தன்மை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஏற்றுமதி வளர்ச்சி 10வீதத்திற்கும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆடை உற்பத்தி, போக்குவரத்து (Logistics) மற்றும் களஞ்சியசாலை துறைகளில் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
இப்பகுதியிலுள்ள மத்திய ஆய்வு நிலையத்தை பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
நீண்டகால வர்த்தக உறவு
புதிய சீர்திருத்தங்களுக்குத் தயாராகும் வகையில் தமது மூலப்பொருள் கொள்முதல் தளத்தை விரிவுபடுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் வில்ஹெல்ம் எலியாஸ் தெரிவித்தார்.

டெஸ்கோ (Tesco) போன்ற முன்னணி பிரித்தானிய வர்த்தக நாமங்களுக்கான ஏற்றுமதி ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுக்கும் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளையும் குழுவினர் பார்வையிட்டனர்.
ஸ்பீட்மார்க் (Speedmark) மற்றும் எய்ட்கன் ஸ்பென்ஸ் லாஜிஸ்டிக்ஸ் (Aitken Spence Logistics) போன்ற நிறுவனங்கள் இந்த பாரிய ஏற்றுமதி சங்கிலிக்குத் தேவையான போக்குவரத்து மற்றும் பொதியிடல் வசதிகளை வழங்கி வருகின்றன.
இந்த DCTS சீர்திருத்தங்கள் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான நீண்டகால வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதுடன், இலங்கையை ஒரு முன்னணி ஆடை கொள்முதல் மையமாக மாற்றும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.