பிரித்தானியா புலம்பெயர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது: ஜிம் ரட்க்ளிஃப் கருத்தால் சர்ச்சை
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கழகத்தின் இணை உரிமையாளரும், பெரும் கோடீஸ்வரருமான ஜிம் ரட்க்ளிஃப், பிரித்தானியா "புலம்பெயர்ந்தவர்களால் காலனித்துவப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறியமை அந்நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதாகவும், அதிகப்படியான மக்கள் அரச நலத்திட்ட உதவிகளைப் பெறுவதோடு, கட்டுக்கடங்காத அளவில் புலம்பெயர்ந்தோர் உள்ளே வருவது நாட்டுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
ரட்க்ளிஃப்பின் இந்தக் கருத்துக்கு பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கோர வலியுறுத்தல்..
இக்கருத்து "அகௌரவமானது மற்றும் தவறானது" என்று குறிப்பிட்ட அவர், இதற்காக ரட்க்ளிஃப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ரட்க்ளிஃப் தனது வாதத்திற்காக நாட்டின் மக்கள் தொகை புள்ளிவிவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020 முதல் தற்போது வரை மக்கள் தொகை 58 மில்லியனில் இருந்து 70 மில்லியனாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார், ஆனால் உண்மையில் அது 67 மில்லியனில் இருந்து 69.5 மில்லியனாகவே உயர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்தின் ஆதரவாளர் அமைப்புகளும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
குறிப்பாக, சீக்கிய மற்றும் முஸ்லிம் ஆதரவாளர் குழுக்கள், ரட்க்ளிஃப்பின் இத்தகைய சொல்லாடல்கள் தீவிர வலதுசாரி சித்தாந்தங்களைப் பிரதிபலிப்பதாகவும், இது சமூகத்தில் வெறுப்புணர்வு மற்றும் இனவெறித் தாக்குதல்கள் அதிகரிக்கக் காரணமாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளன.
சுமார் 17 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்பு கொண்ட ரட்க்ளிஃப், வரிச் சலுகைகளுக்காக மொனாக்கோவிற்கு இடம்பெயர்ந்தவர் என்பதும், சமீபத்தில் இவரது நிறுவனத்திற்கு பிரித்தானிய அரசு நிதி உதவி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.