பிரித்தானியாவில் மூன்றாவது அலைக்கான அறிகுறிகள்! - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலைக்கான அறிகுறிகளின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானியான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவி குப்தா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் கோவிட் வழக்குகள் ஒப்பீட்டளவில் குறைவாக காணப்படுகின்ற போதிலும், இந்திய மாறுபாடு அதிவேக வளர்ச்சியை தூண்டியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியாவில் ஜூன் 21ம் திகதி கோவிட் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரும் தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice, திட்டமிடப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தாமதத்தை அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இன்றுடன் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 3000க்கும் மேற்பட்ட புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 12ம் திகதிக்கு பின்னர் இந்த எண்ணிக்கையை விட அதிகமாக இருந்ததில்லை.
நேர்மறையான சோதனையின் 28 நாட்களுக்குள் உயிரிழப்புகள் எதுவும் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் பதிவாகவில்லை. எனினும், ஸ்காட்லாந்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பிபிசி வானொளியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேராசிரியர் ரவி குப்தா, “இங்கிலாந்தில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளார்.
குறைந்தது முக்கால்வாசி வழக்குகள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட மாறுபாடாகும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். "நிச்சயமாக இந்த நேரத்தில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
எனினும், எல்லா அலைகளும் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகளுடன் ஆரம்பித்து பின்னர் வேகமாக பரவும் தன்மையுடன் தொடங்குகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான விடயம் என்னவென்றால் நாம் இங்கே காண்பது அலையின் ஆரம்ப அறிகுறிகளாகும்” என பேராசிரியர் ரவி குப்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் இறுதி கட்டம், நீங்கள் எத்தனை பேரை சந்திக்க முடியும் என்பதற்கான அனைத்து வரம்புகளையும் நீக்குவதாகும்.
இந்நிலையில், ஜூன் மாதத்தில் அமுலாகும் கட்டுப்பாடு தளர்வுகளை "சில வாரங்களுக்கு தாமதமாக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் நாங்கள் அதிக தகவல்களை சேகரிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
பொது முடக்கத்தினை முன்னைய திட்டமிடலுக்கிணங்க முடிவுக்கு கொண்டுவர எண்ணுவதால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை முழுமையாக ஆராய்ந்துபார்த்தால், தீமையே அதிகம் ஏற்படவாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் பொதுமுடக்க நிலையினை தாமதமாக முடிவுக்கு கொண்டுவருவதையே அதிகம் விரும்பப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.