பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் நாடாளுமன்றத்தில் அதிரடி
அஸ்டன் வில்லா (Aston Villa) கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் இஸ்ரேலிய ரசிகர்களுக்குத் தடை விதித்தமை தொடர்பாக, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறைத் தலைமை அதிகாரி மீது தான் நம்பிக்கை இழந்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் நாடாளுமன்றத்தில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 6-ஆம் திதி பர்மிங்காமில் நடைபெற்ற 'மக்கபி டெல் அவிவ்' (Maccabi Tel Aviv) மற்றும் அஸ்டன் வில்லா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இஸ்ரேலிய ரசிகர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடைக்கு காவல்துறை அளித்த தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட புலனாய்வுத் தகவல்களே காரணம் எனத் தற்போது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்த விசாரணையில், காவல்துறைத் தலைமை அதிகாரி கிரேக் கில்ட்போர்ட் (Craig Guildford) பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
AI சாதனம்
ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், தற்போது மைக்ரோசாப்ட் கோபைலட் (Microsoft Copilot) எனும் AI சாதனத்தை பயன்படுத்தி அறிக்கை தயாரித்ததை அவர் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடக்காத ஒரு போட்டியை (டெல் அவிவ் vs வெஸ்ட் ஹாம்) நடந்ததாகக் காட்டி, அதன் அடிப்படையில் இந்தத் தடையைப் பரிந்துரைத்துள்ளனர். இஸ்ரேலிய ரசிகர்களால் ஆபத்து ஏற்படும் என்பதை மிகைப்படுத்திக் காட்டிய காவல்துறை, அந்த ரசிகர்களுக்கு இருக்கக்கூடிய அச்சுறுத்தலைக் கவனிக்கத் தவறிவிட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் கூறுகையில், "இது ஒரு தலைமைத்துவத் தோல்வி. யூத சமூகத்தினருடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," எனச் சாடினார்.
இச்சம்பவம் குறித்து எதிர்வரும் ஜனவரி 27-ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கிரேக் கில்ட்போர்ட் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.