பிரித்தானியாவை மீண்டும் தாக்கும் கோவிட் தொற்று! - திடீரென நோயாளர்கள் எண்ணிக்கையில் உயர்வு
பிரித்தானியாவில் கோவிட் தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் முதன் முறையாக நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் 11,007 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாவும், 19 பேர் உயிரிழந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக பெப்ரவரி 19ம் திகதி 12,027 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டிந்தது. மேலும் மே 11ம் திகதிக்கு பின்னர் இன்றைய தினம் அதிகளவாக கோவிட் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மே 11ம் திகதி 20 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்தனர். அந்த வகையில் பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் இதுவரையில் 127,945 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 7ம் திகதிக்கு பின்னர் வைத்தியசாலையில் சேர்ப்பவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இது 18 வீத உயர்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஒவ்வொரு 11 நாட்களுக்கும் கோவிட் வழக்குகள் இரட்டிப்பாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், இளம் வயதினர் மத்தியில் நோய் தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் இயக்கவியல் பேராசிரியர் ஸ்டீவன் ரிலே இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
புதிய வழக்குகளில் பெரும்பாலானவை 18 முதல் 24 வயதுடையவர்களிடமும், ஐந்து முதல் 12 வயது வரையிலான குழந்தைகளிடமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
18 முதல் 24 வயதுடையவர்களிடையே கோவிட் வழக்குகள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை விட ஐந்து மடங்கு அதிகம் என்று காட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊகடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நோய் பரவலை தடுக்கும் முயற்சியாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை முதல் கோவிட் தடுப்பூசியை முன்பதிவு செய்ய முடியும் என்பதை சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் இன்று உறுதிப்படுத்தினார்.