பிரித்தானியாவில் கடும் அழுத்தத்தில் சுகாதாரத்துறை: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையினால் பொதுமக்கள் பொது அறிவை பயன்படுத்த வேண்டும் என்று பிரித்தானிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பொதுமக்கள் கூடுதல் கவனமாக இருக்குமாறும், அதற்கேற்ப உங்கள் செயல்பாட்டை திட்டமிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியா மற்றும் வேல்ஸில் உள்ள ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ஆபத்தான தேவைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
இதன் காரணமாக சுகாதார அமைப்பு கடும் அழுத்தத்தில் செயற்படுவதினால் மக்கள் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள தங்களாலான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தமானது மிகவும் வருந்தத்தக்கது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் தேசிய சுகாதார சேவை (NHS) உயிருக்கு ஆபத்தான தேவைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு செயலாளர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸில் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக தான் பின்வாங்கப் போவதில்லை என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கிறிஸ்துமஸுக்கு முன்னதாக நெருக்கடியை தீர்க்குமாறு செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.