உலகின் ஒரே ஜனாதிபதி என்ற இடத்தை பிடித்த கோட்டாபய - உதய கம்மன்பில வெளிப்படுத்தும் விடயம்
சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இடம்பிடித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சர்கள் தோல்வியடைவதற்கு குடும்ப ஆட்சி பிரதான காரணமாக அமைந்தது,ஆகவே 2019ஆம் ஆண்டுக்கு பிறகு பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள் என எதிர்பார்த்தோம்.
அமைச்சரவையில் ராஜபக்சர்களின் ஆதிக்கம்
இருப்பினும் எமது நிலைப்பாடு இறுதியில் தவறானது. 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைச்சரவையில் ராஜபக்சர்கள் தான் அதிக ஆதிக்கம் கொண்டிருந்தார்கள்.
சிரேஷ்ட அமைச்சர்கள் ராஜபக்சர்களின் இளவரசரான நாமல் ராஜபக்சவிடம் ஆலோசனை பெற வேண்டிய சூழலை கோட்டாபய ராஜபக்ச ஏற்படுத்தினார்.

அமைச்சரவையில் பொருளாதார துறைசார் நிபுணர்கள் அங்கம் வகித்த போதும் நிதி நிலைமை தொடர்பில் அடிப்படை தகைமை கூட இல்லாத பஷில் ராஜபக்ச நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் 55 அரச திணைக்களங்கள் அனைத்தும் அவரது பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
ராஜபக்சர்கள் அமைச்சரவை முழுமையாக ஆக்கிரமித்தமை தொடர்பில் வாராந்தம் இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டம் இரத்து செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டம் ராஜபக்சர்களின் குடும்ப உறுப்பினர்களின் இரவு விருந்து உபசாரத்தின் ஊடாக எடுக்கப்பட்டது.
தவறான ஆலோசனைகள்
தவறான பொருளாதார தீர்மானங்கள் முழு நாட்டையும் சீரழிக்கும் என நாங்கள் எடுத்துரைத்ததை தொடர்ந்து நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச தனது சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் முறையிட்டார்.
சகோதரரின் தவறான ஆலோசனைகளை கேட்டு கோட்டாபய ராஜபக்ச எங்களை பதவி நீக்கினார். எம்மை பதவி நீக்கி விட்டு மூன்று மாதத்திற்கு பின்னர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

ராஜபக்சர்களின் குடும்ப ஆதிக்கத்தினால் 69 இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமாக்கப்பட்டது. போராட்டத்தின் ஊடாக ராஜபக்சர்களை மக்கள் புறக்கணித்தார்கள். ஆனால் ராஜபக்சர்களை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
ராஜபக்சர்களின் தவறான பொருளாதார கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பின்பற்றுகிறார். மக்கள் படும் துயரத்தை அவர் கண்டு கொள்ளவில்லை, ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல, தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைய நேரிடும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்கு அறிவார்.
அதனால் தான் தேர்தலை பிற்போட சூழ்ச்சி செய்கிறார். கௌரவமான முறையில் செயற்பட்டால் இறுதி காலத்தை கௌரவமாக கழிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        