மன்னார் விவகாரம் - இலங்கைக்கு இந்தியாவால் காத்திருக்கும் நெருக்கடி
திருகோணமலை எண்ணெய் குதங்கள் ஏற்கனவே இந்திய நிறுவனமான ஐஓசியினால் கையாளப்பட்டு வருகின்றனதாக டெலோவின் உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளரும், சர்வதேச தொடர்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இந்தியாவின் மையங்களாக இன்று திருகோணமலை மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள முக்கிய பகுதிகள் இருக்கின்றன. இந்தியாவின் வருகையின் பிரதான நோக்கம் தன்னுடைய இடங்களை பார்வையிடுவதும், கையகப்படுத்துவதும் மட்டுமா அல்லது அதில் ஈழத்தமிழர் விவகாரம் உண்மையில் ஆத்மார்த்தமாக அவர்கள் கரங்கள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
இந்த விடயத்தை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், 1985ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையிலே நாங்கள் முடிவிற்கு கொண்டு வந்த இந்த தீர்வுத் திட்டமானது பிறகு இலங்கை அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு அவர்களுக்கும் அந்த விடயத்தில் அழுத்தம் வழங்கப்பட்டு, கிட்டத்தட்ட 36 வருடங்களாக இந்திய அரசாங்கம் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை பற்றிப்பிடித்திருக்கிறது.
ஆகவே தமிழர் தரப்பிலே இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் அவர்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட பல விடங்களை கைவிடாமல் பற்றியிருக்கின்றார்கள்.
தேவையாக இருந்தால் அவர்கள் பழைய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை இரத்துச் செய்து விட்டு புதிய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை கொண்டு வர முடியும்.
அத்துடன் பூகோள அரசியலில் அபிவிருத்தி சார்ந்த விடயங்களை அவர்கள் கையாள வேண்டிய தேவை இருக்கிறது. குறிப்பாக திருகோணமலை எண்ணெய் குதங்கள் ஏற்கனவே இந்திய நிறுவனமான ஐஓசியினால் சில இடங்கள் கையாளப்பட்டு வருகின்றன.
மிகுதி எண்ணெய் குதங்களையும் அவர்கள் முகாமை செய்வதற்கான ஒப்பந்தகளை மேற்கொள்வதற்கும், அதேபோன்று சீனாவின் ஊடுறுவல் அல்லது சீனாவின் அழுத்தம் என்பது இலங்கைக்கும் இருப்பதால் அதை நாங்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்ற செய்தியை சொல்வதற்குமான வரவாகத் தான் அதை நாங்கள் பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மன்னார் பகுதியில் எண்ணெய் இருப்பதாக ஒரு விஞ்ஞான ஆய்வு சொன்னதன் பின்னர் பல நிறுவனங்கள் அதற்கான ஆராய்ச்சியை செய்தார்கள். ஆனால் எவருமே எந்த அளவிற்கு அங்கு எண்ணெய் இருக்கிறது என்பதை காத்திரமான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த எண்ணெய் படிமத்திற்கான Belt மன்னார் பகுதியில் வந்திருந்தாலும் கூட இந்தியாவின் எல்லையோடேயே அது காணப்படுகிறது. ஆகவே அதில் எண்ணெய் வளங்கள் இருந்தாலும் அந்த வளங்களை மீட்பதாக இருந்தால் இந்தியாவின் அனுமதியும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.