ரமழான் மாதத்தைக் குறிவைத்து இடம்பெற்ற பாரிய மோசடி: அமீரக பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ரமழான் மாதத்தில் வெளிநாடுகளிலிருந்து யாசகம் பெறுவதற்காக சில அடையாளம் தெரியாத கும்பல்களால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏராளமான யாசகர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் முன்னெடுக்கபப்ட்ட இந்த கைது நடவடிக்கையில், பல யாசகர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ சேர்ந்து யாசகம் எடுத்து பெருந்தொகையைக் குவித்துள்ளமையும் பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதில் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளிலிருந்து அமீரகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விசா, விமான டிக்கெட் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கி, யாசகம் பெறும் அவர்களின் தினசரி வருமானத்தில் 80 சதவீத தொகையை அந்த கும்பல் பெற்றுக்கொண்டதாகவும் அமீரக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் எச்சரிக்கை
குறிப்பாக அமீரகத்தில் புனித ரமழான் மாதத்தில் மசூதிகள், சந்தைகள், குடியிருப்புப் பகுதிகள், ரமழான் கூடாரங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற பொது இடங்களில் அனுதாபத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை யாசகர்கள் ஏமாற்றுகின்றனர்.
இது போன்று ஏமாற்றி யாசகம் எடுப்பது, கொள்ளையடித்தல் மற்றும் சட்டவிரோதமாகப் பணம் திரட்டுதல் போன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் துபாய் பொலிஸார் எச்சரித்துள்ளது.
மேலும், இஸ்லாமியர்களின் புனித ரமழான் ஆரம்பித்துள்ளதால் அனுதாபத்தில் யாசகர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலம் மட்டுமே நன்கொடை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.