முந்திச் செல்ல முற்பட்டதால் வந்த வினை.. ஒன்றுடனொன்று மோதிக் கொண்ட பேருந்துகளால் பறிபோன உயிர்
வாதுவ - மொரோந்துடுவ வீதியின் மாலேகம பகுதியில் இன்று (24) காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர், அக்குரஸ்ஸ பகுதியில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை - பண்டாரகம மற்றும் வேரகம - கொழும்பு வழித்தடங்களில் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கின.
பொலிஸ் விசாரணைகள்
விபத்து ஏற்பட்ட நேரத்தில் இரண்டு பேருந்துகளும் தங்கள் பயணங்களைத் தொடங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தன என்பது தெரியவந்துள்ளது.

பேருந்துகளில் ஒன்று முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த இரு சாரதிகளையும் உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், சாரதிகளில் ஒருவர் அங்கேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
விபத்தைத் தொடர்ந்து பேருந்துகள் சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டதால் பாணந்துறை - மொரோந்துடுவ சாலையில் மாலேகம பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றார்.
பின்னர் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளூர்வாசிகளும் சாலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் வாதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.