இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது
உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஆகியோரை நுவரெலியா மற்றும் கல்முனையில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கைது செய்துள்ளது.
மட்டக்களப்பு - வெல்லாவெளியில் கடமையாற்றி வரும் சக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் 72,000 ரூபாய் பணம் மற்றும் கைபேசியை கையூட்டலாக 2021ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் கல்முனை நாற்பட்டி முனை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது வீட்டிலிருந்தே பணிக்கு வந்து செல்வதற்காக மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியைப் பெற வேண்டியிருந்துள்ளது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இதற்கமைய கடந்த 2021ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த பொலிஸ் அதிகாரி அனுகியபோது அவர் இதற்கான பரிந்துரைகளைச் செய்து தருவதாகக் கூறியுள்ளார்.

இதற்காக, அவரிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் கைபேசி உள்ளிட்ட பொருட்களையும், 72,000 ரூபாய் பணத்தையும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரியும் இலஞ்சமாக கோரி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடந்த வருடம் இடமாற்றம் பெற்று நுவரெலியாவுக்கு சென்றுள்ளதுடன் பெண் பொலிஸ் அதிகாரி கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இந்த நிலையில் இக்குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து நேற்று (05) நுவரெலியாவில் கடமையாற்றி வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகரை காலை 10.50 மணியளவில் அங்கு வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.

அதேவேளை கல்முனை பொலிஸ் உதவி அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றி வந்த பெண் அதிகாரியை பிற்பகல் 3.00 மணிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
அதற்கமைய, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரையும் முறையே நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.