தமிழர் பகுதியில் போதைப்பொருள் கடத்த முற்பட்ட இருவர் கைது (Photos)
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளமடு வீதியில் கேரள கஞ்சா பொதியினை வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(01.06.2023) குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் வாகனமொன்றில் கொண்டு செல்ல முற்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 85 கிலோ கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணை
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய மன்னார் பேசாலை மற்றும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைக்காக இரு சந்தேகநபர்களும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், வாகனம் ஆகியவை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.