இரவில் ஏற்பட்ட கோர விபத்து : இளைஞர்கள் இருவர் மரணம் - ஒருவர் ஆபத்தான நிலையில்
கல்பிட்டி - பாலாவி பிரதான வீதியின் சேத்தாபொல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலையிலிருந்து முந்தல நோக்கி பயணித்த லொறி ஒன்றும் பாலாவியவில் இருந்து நுரைச்சோலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இருவர் மரணம்
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் 3 இளைஞர்கள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மூவரும் கவலைக்கிடமான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் இருவர் அனுமதிக்கும் போதே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இரு இளைஞர்களும் 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.