வவுனியாவில் யானை தாக்கி இருவர் படுகாயம்
வவுனியா கனகராயன்குளம், விஞ்ஞானகுளம் பிரதான பாதையில் இரு தினங்களில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (13) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இருவர் காயம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கனகராயன்குளத்தில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு விஞ்ஞானகுளத்தில் உள்ள தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த தே.நிஷாந்தன் என்ற 32 வயது இளைஞனே கனகராயன்குளம் பாலத்துக்கு அருகில் பிரதான வீதியில் வைத்து யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன் போது தலையில் காயம் அடைந்த அவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றுமுன் தினமும் (12) குறித்த பகுதியில் வயோதிபர் ஒருவர் குறித்த வீதியால் சென்றபோது யானை தாக்கி படுகாயம் அடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.




