மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து அதிரடியாக இருவர் கைது - சந்தேக நபர்களிடம் இருந்த மீட்கப்பட்ட பொருள்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்வையிடுவதற்காக வந்த அவரது சகோதரன் மற்றும் நண்பர் ஆகிய இருவரையும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றை தினம்(19.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டோர்
குறித்த சிறைக்கைதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவராவார்.
இவரை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்த நிலையிலேயே அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவரும் போதைப்பொருட்களுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி 7 அரைக் கிலோ கொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலை சம்பவத்தை அடுத்து அவர் உட்பட அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வியாபரி
இதனையடுத்து குறித்த சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமைய பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த தொட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிக்கிராம் ஹெரோயின் 500 மில்லி கிராம் ஐஸ் போதைபொருட்களுடன் கைது செய்துள்ளனர்.
இதில் போதைப்பொருள் வியாபரியின் சகோதரன் ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் வெளியே வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.