கொட்டகலையில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மூவர்
கொட்டகலை பத்தனை சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர்.
அதில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றொருவர் கடும்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூவர் பலி
குறித்த சம்பவம் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை சந்தியில் இன்று(2025.12.20) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 21 வயது மதிக்கத்தக்க லிந்துலை கவ்லிணா பகுதியை சேர்ந்த பதுர்தீன் மொஹமட் அப்துல் ரையிம் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டயகம பகுதியில் இன்று 4.45 மணியளவில் புறப்பட்டு வந்த பேருந்து பத்தனை ஊடாக நாவலபிட்டி கண்டி செல்லும் போது தேநீர் அருந்துவதற்காகவும் சிறுநீர் கழிப்பதற்காகவும் நிறுத்தப்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த பேருந்து வழமையாக இந்த இடத்தில் நிறுத்தப்படுவதாகவும் அந்த வேளை ஹட்டன் பகுதியிலிருந்து வந்த லொறி பேருந்து மீது மோதி சிறுநீர்கழிக்க சென்றவர்கள் மீதும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
சாரதிகள் கைது
விபத்தில் லொறிக்கோ பேருந்துக்கோ பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. கடும் காயங்களுக்கு உள்ளான நபர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தசம்பவத்தில் உயிரிழந்த மற்றைய நபர் பத்தனை பெய்திலி பகுதியை சார்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முதலில் உயிரிழந்த நபர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியை பார்வையிடுவதற்காக சென்ற போதே குறித்த அனர்த்ததிற்கு முகம் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பேருந்து மற்றும் லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பேருந்தினை வலது பக்கத்தில் பாதுகாப்பின்றி நிறுத்தியமைக்காகவும் லொறி சாரதிக்கு விபத்தினை தவிர்க்காமைக்காகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.