மன்னாரில் இரு படகுகள் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்
மன்னார் தாழ்வுபாடு மீன்பிடி துறையில் இருந்து நேற்று (15) இரவு கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளி ஒருவரின் படகு ஒன்றும், கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய கடற்றொழிலாளி ஒருவரின் படகு ஒன்றும் மோதிய நிலையில் இரு படகுகளும் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
படகுகளில் ஒரு படகு கரை திரும்பிய நிலையில், மற்றைய படகு கடலில் மூழ்கியதோடு, குறித்த படகு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் மூழ்கிய படகில் பயணித்த கடற்றொழிலாளி ஒருவர் இன்று(15) காலை சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
குறித்த இரு படகுகளின் உரிமையாளர்களும் விபத்து குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றவர் தொழிலுக்குச் சென்ற மீன்பிடி படகின் வெளி இணைப்பு இயந்திரம் அவரின் மீன் வாடியில் வைக்கப்பட்ட நிலையில்,மற்றைய படகின் கடற்றொழிலாளர்கள் தமது படகு சேதமானதை தெரிவித்து குறித்த வாடியின் கதவை உடைத்து வெளியிணைப்பு இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் குறித்தும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |