சிங்கள தேசத்திலிருந்து ராஜகுமாரன் வரும்வரை காத்திருக்க வேண்டுமா? மனோ கணேசனின் உருக்கமான பதிவு
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கோவிட் தொற்றுக்கு இலக்காகி நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
இதனையடுத்து,அவரது உடல் பொரள்ளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கு சர்வதேச இராஜதந்திரிகள், இலங்கை அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் மங்களவின் மறைவிற்கு தமது அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மங்கள சமரவீரவின் நெருங்கிய நண்பரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மங்கள சமரவீரவின் மறைவு தொடர்பில் மிக உருக்கமான பதிவொன்றினை தனது முகப்புத்தக பதிவில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மங்களவின் வாழ்வில், 2007க்கு முன், 2007க்கு பின் என்று இரண்டு காலகட்டங்கள் உள்ளன. இரண்டும் ஏறக்குறைய இரு பிறவிகள் போன்றவை தான்.
இரண்டாம் பிறவியில் அவர் ஆரம்பித்த “லிபரல்” (Liberal) பயணத்தின் சில அம்சங்கள், அவரது முதலாம் பிறவியில், 1995-2000 காலகட்டங்களில் தெரிந்தாலும், அவை, அதன் பின்னர் 2007 வரை நின்று போய் விட்டன.
2000-2007 நடைபெற்ற சம்பவங்கள் இலங்கை சரித்திரத்தையே திருப்பி போட்டன. “லிபரலிசம்” என்பதற்கு அகராதி “தாராளவாதம்” என அர்த்தம் சொல்கிறது. எனக்கென்னவோ அது சரியான அர்த்தமாக தெரியவில்லை. “பரந்தவாதம்” மாதிரி ஒரு அர்த்தம் வர வேண்டும்.
சமீபத்தில் அவர் ஆரம்பித்த சிறப்பு வாய்ந்த லிபரல் பயணம் இடை நடுவில் இப்போது நின்று போய் விட்டது. இந்த இரண்டாம் பயணத்தை பற்றி தான் இப்போது நாம் எல்லோரும் பேசுகின்றோம். அது அப்படியே இருக்கட்டும். இந்த லிபரல் பயணத்தை முன் கொண்டு செல்ல "சிங்கள தேசத்தில் இருந்து ஒரு ராஜகுமாரன்" வரும் வரை காத்திருக்க வேண்டுமா ?
மங்களவின் இரண்டாம் பயணத்தை போன்றே முதலாவதும் இருந்திருந்தால், இந்நாட்டின் சரித்திரம் வேறு திசை நோக்கி போயிருக்கும். ஏனென்றால் மங்கள தான் சமகாலத்தில் சிங்கள தேச அரசியல் தலைவர்களில் இருவரை மேலேயும், இருவரை கீழேயும் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர்.
மேலே-கீழே என்றால், மேலுலகம், கீழுலகம் என்பதல்ல. அவர்கள் நால்வரும் உயிரோடு தான் இருக்கிறார்கள். அவர் தான் சென்று விட்டார்.
மங்களவின் இரு பிறவி காரியங்களுக்கும் தெற்கிலும், வடக்கிலும், மேற்கிலும், கிழக்கிலும், மத்தியிலும் வாழும் எம்மில் பலர் உதவி இருக்கிறார்கள். அதில், பலர் வாழ்கிறார்கள். வாழ்ந்தார்கள். அழிந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.