இலங்கை சிவில் நடைமுறைச் சட்டக் கோவையில் புதிய திருத்தம்
இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள சாட்சிகள் நேரலை காணொளி ஒளிபரப்புத் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றங்களில் சாட்சியமளிப்பதற்கு வசதியாக, சிவில் நடைமுறைச் சட்டக் கோவையில் திருத்தம் செய்வதற்கான புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தச் சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தரப்பினரின் உடன்பாடு, நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது கோரிக்கைகளின் அடிப்படையில் சாட்சிகள் காணொளி வாயிலாக சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.
சட்டவிரோதப் பதிவு
அத்துடன் இந்த வசதியின் மூலம், வெளிநாடுகளில் உள்ள சாட்சிகள் இலங்கைக்கு வருகை தராமலேயே சாட்சியமளிக்க முடியும்.
இதற்காக இலங்கைத் தூதரக அதிகாரிகள் அல்லது சட்டத் தரணிகள்/அறங்கூறுநர்கள் ஆணையாளர்களாக நியமிக்கப்படலாம். நோய் அல்லது உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்திற்கு வர முடியாத சாட்சிகள், தங்களது வீடுகளில் இருந்தவாறே சாட்சியமளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

சாட்சிகளின் அடையாளம், இரகசியத்தன்மை மற்றும் சட்டவிரோதப் பதிவுகளைத் தடுத்தல் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வழக்கமான நீதிமன்றச் சாட்சியங்களுக்கு இணையான சட்டப்பூர்வத் தன்மை இதற்கு வழங்கப்படும் இதேவேளை, குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே சட்டமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.