இறக்கக்கண்டியில் வெடிபொருட்களுடன் இருவர் கைது
திருகோணமலை - இறக்கக்கண்டி பிரதேசத்தில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த இருவரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை இராணுவப்புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்றிரவு திருகோணமலை, இறக்கக்கண்டி பிரதேசத்தில் குறித்த வீட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 லெலைனைற் குச்சிகள், சேவா நூல் என்பவற்றை மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர்.
இதன்போது நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும், இறக்கக்கண்டியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையும் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
இவர்கள் என்ன நோக்கத்திற்காக ,எங்கிருந்து இவ்வெடி மருந்துகள் கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


