கல்முனையில் போதைப்பொருள்களுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இன்று(12.02.2026) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
அத்துடன், மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் பெரும்தொகை போதைப் பொருட்களுடன் இருவர் வாகனமொன்றில் நடமாடுவதாக அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போதைப் பொருட்கள் மீட்பு
இதன்போது சந்தேக நபர்கள் இருவர் கல்முனை வைத்தியசாலை அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து, 61 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், தொலைபேசிகள் நிறுத்தல் தராசு, ATM அட்டைகள், வாகனம் ஒன்று என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபர்கள் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதிக்கும் சந்தேக நபர்கள் அழைத்து செல்லப்பட்டு அவர்களது வீடுகளும் சொதனை செய்யப்பட்டன.
இவ்வாறு கைதானவர்கள் 28 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் இருவரையும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



