முல்லைத்தீவில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிய இருவர் கைது
அனுமதி பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில், டிப்பர் வாகனத்துடன் சாரதியும் அனுமதி பத்திரம் கோரிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையை நேற்றையதினம்(17.03.2025) புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி ஆலயத்திற்கு மண் ஏற்றுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிபத்திரம் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
அதனை வைத்து மன்னாகண்டல் இராணுவத்தினர் இருந்து விட்டு சென்ற பகுதியில் இருந்து மணலை ஏற்றி புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மணல் விற்பனை செய்வதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வழிமறித்து டிப்பர் வாகனத்தில் சோதனை மேற்கொண்ட போது அனுமதி பத்திரம் இல்லாது சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே, குறித்த கைது நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
முன்னதாக, மணல் விற்பனை செய்யும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அப்பகுதியில் மணல் ஏற்றி செல்வதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடம் அனுமதி பத்திரம் கோரிய போது அந்த இடத்தில் அவ்வாறு வழங்க முடியாது என பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருடன் குறித்த நபர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து டிப்பர் வாகனத்திற்கு அனுமதி பத்திரம் கோரிய நபரும் நேற்றையதினம் கைது செய்யப்படிருந்தார்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விசாரணையின் பின்னர் இன்றையதினம்(18) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கில் சாரதி பிழையினை ஒப்புக்கொண்டதனால் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்தோடு அனுமதி பத்திரம் கோரி பிரதேச செயலகத்துடன் முரண்பட்ட நபரை 01.04.2025ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 39 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாரதியும் 48 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |