மட்டக்களப்பில் அரச பேருந்து ஊழியர்களை தாக்கிய இருவர் கைது
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடாத்திய இருவரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நடவடிக்கை நேற்று (20) இரவு புல்லுமலை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலஸார் குறிப்பி்ட்டுள்ளனர்.
பதுளையில் இருந்து புல்லுமலை ஊடாக மட்டக்களப்புக்கு செல்லும் அரச பேருந்து சாரதி மற்றும் நடத்துனர், புல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை நேற்று கேலி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதி உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இதனை தொடர்ந்து குறித்த பேருந்து மட்டக்களப்பில் இருந்து பதுளை நோக்கி மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்து சேவையில் ஈடுபட்டிருந்துள்ளது.
இதன்போது பேருந்து புல்லுமலை பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி பிரயாணிகளை ஏற்றிக் கொண்ட நிலையில் அங்கு காத்திருந்த இருவர் சாரதி நடத்துனர் உடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |